Sunday, March 29, 2009

சபாஷ் சரியான போட்டி - இரு தரப்பும் சொல்வதும் உண்மை.

சென்னை: மனைவிக்கும், மைத்துநருக்கும் பதவி கொடுத்து அரசியல் வைத்திருக்கும் விஜயகாந்த், குடும்ப அரசியல் குறித்து பேச தகுதி இல்லை என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் நவீன புத்தன் ஒருவர் தோன்றியிருக்கிறார். அவர் தான் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். ஆமாம், அவருக்கு அப்படித் தான் நினைப்பு.கட்சி ஆரம்பித்து, சட்டமன்றத்தில் ஒரு இடத்திற்கு மேல் இன்னும் இரண்டாவது இடத்தைப் பிடிக்கவில்லை. மதுரையே என் கோட்டை என்று கூறிய திருமங்கலம் தொகுதியிலே `டெபாசிட்'டுக்கே வழியில்லை.
ஆனால்,

அதற்குள்ளாகவே அடுத்த முதல்-அமைச்சர் தான் தான் என்பதைப்போல ஒரு நினைப்பு.ஜெயலலிதா பேசுவதைப் போலவே தன்னை விட்டால் வேறு கதியில்லை என்று `மைக்'கைப் பிடித்துவிட்டால் போதும், எதை வேண்டுமானாலும் பேசுகிறார்.

கிராமப்புறங்களில் நடிகரைப் பார்க்க, அதுவும் சில படங்களிலே கதாநாயகராக வேறு நடித்துவிட்டால் போதும், மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதில்லையா, அப்படி வரும் கூட்டங்களையெல்லாம் தனக்கு வாக்களிக்கப் போகும் கூட்டம் என்று நினைத்துக்கொண்டு-அவருக்கு ஏதோ 15 பாராளுமன்ற தொகுதிகளையும், பல கோடிகளையும் கொட்டித் தர அழைத்ததாகவும், தான் விலை போகவில்லை என்றும் ஊருக்கு ஊர் பேசிக் கொண்டிருக்கிறார்.தனியாருக்கு கல்வியை விற்றுவிட்டதாக நேற்று பேசியிருக்கிறார்.

இவரே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியை நடத்திக் கொண்டு, கொள்ளை வசூல் செய்து கொண்டு ஏதோ உத்தமரைப் போல தனியாருக்கு கல்வியை விற்று விட்டதாகப் பேசுகிறார்.இவர் திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுத்து, இவரைப் பாராட்டி பேசியதே முதல்-அமைச்சர் கருணாநிதியும், மூப்பனாரும் தான். பெற்ற வயிற்றையே கிழிப்பது போல அவர்கள் இருவரின் கட்சிகளைத் தான் அன்றாடம் வாய் கிழிய திட்டிக் கொண்டிருக்கிறார்.மூத்த தலைவர்களையெல்லாம் சகட்டுமேனிக்கு வசை பாடுகின்ற வழக்கம் இதுவரை ஜெயலலிதாவுக்குத்தான் இருந்தது. இப்போது தானும் அதற்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை என்று புகழ் பெறுகின்ற அளவிற்கு விஜயகாந்த் பேசுகிறார்.இலங்கை பிரச்சினைக்காக தேர்தலையே புறக்கணிப்போம் என்று அறிவித்தவரும் இவர்தான். எல்லோருக்கும் முன்பாக தற்போது வேட்பாளர்களை அறிவித்திருப்பதும் அவர் தான். காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியில்லை என்று சொன்னவரும் இவர்தான்.காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளிலே நிற்கப்போகிறது என்று தெரிவதற்குள் வேட்பாளர்களை அறிவிப்பதும் இவர்தான். அதே காங்கிரஸ் கட்சியின் மத்திய ஆட்சியை கண்ணை மூடிக்கொண்டு சாடுவதும் இவர்தான்.தி.மு.க.விலே குடும்ப அரசியல் என்கிறார். ஆனால், அவரது கட்சி ஆரம்பித்து ஒருசில ஆண்டுக்குள்ளாகவே அவரது மனைவியும், மைத்துனரும் தான் அவரது கட்சியிலே எல்லாமாகவே இருக்கிறார்கள் என்பது ஊருக்கே தெரிகிறது.அவர் கட்சியின் சார்பில் தனித்துப் போட்டியிடுவது பற்றியோ-அதற்காக தேர்தல் பிரசாரம் செய்வது பற்றியோ நமக்கு எந்த விதமான ஆட்சேபணையும் கிடையாது.இந்திய நாட்டில், ஜனநாயகத்தில் அது அவருக்கு உள்ள உரிமை. ஆனால், தேவையில்லாமல் தி.மு.க.வை வம்புக்கு இழுப்பதும்- ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடைபெறுகிறது என்றும் சொல்லும் விஜயகாந்துக்கு ஒன்று சொல்வேன்.முதலில் `உன் கண்ணில் உள்ள உத்திரத்தை எடுத்துவிட்டு, பிறகு மற்றவர்கள் கண்ணில் உள்ள தூசியை அகற்றுவதற்கு முயற்சி செய்' என்று கூறியுள்ளார் வீராசாமி.

No comments:

Post a Comment