Monday, March 30, 2009

நடந்தது என்ன ? கண்ணப்பனின் துரோக நிமிடங்கள்.

தலைவர் வைகோ வின் கடிதம் (சங்கொலி யில் வந்தது)

விடம்தோய்ந்த அம்புகள்;வீறுகொள்ளும் வேங்கைகள்!
இமைப்பொழுதும் நீங்காது என் இதயத்துடிப்போடும்இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்டகண்ணின்மணிகளே!


கண்ணீர் உறைந்துபோன தமிழர் இதயங்களுக்கு வெளிச்சம் தென்படுமா எனக் கவலை சூழ்ந்துள்ள நிலையில், இக்கடிதத்தை எழுதுகிறேன். இலங்கைத்தீவில், பேரழிவின் பிடியில் சிக்கி இருக்கும் ஈழத்தமிழர்களை, மரண பயங்கரத்தில் இருந்து மீட்டு, விடியலுக்கு இட்டுச்செல்ல, இப்பூவுலகின் பல்வேறு நாடுகளில், தமிழ் மக்கள் துடிதுடித்துப் போராடி, மனிதகுல மனசாட்சியின் கதவுகளைத் தட்டிக்கொண்டு இருக்கின்ற வேளையில், தாய்த்தமிழகத்தின் பங்களிப்பின் மூலம்தான், கொடியோரின் மரண முற்றுகையைத் தகர்க்க முடியும் என்று நம்புகின்றனர்.

ஈழத்தமிழ் இனத்தைக் கரு அறுக்கவும், பூண்டோடு ஒழிக்கவும் நடத்துகின்ற இராணுவத் தாக்குதலில், தமிழர்களின் காவல் அரணும், உரிமைக் கவசமுமான விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட, பல நாடுகளில் இருந்து வாங்கிக் குவித்து உள்ள ஆயுதங்களைக் கொண்டு, அதிலும் அனைத்து உலக நாடுகளும் தடைவிதித்து உள்ள நாசகார ஆயுதங்களைப் பயன்படுத்தி, சிங்களப் பேரினவாத அரசு தாக்குதல் நடத்துகிறது. இந்தத் தமிழர் இன அழிப்பு யுத்தத்தை இயக்குவது இந்திய அரசுதான்; ஊக்குவிப்பது இந்திய அரசுதான்; ஆயுதம் தருவது இந்திய அரசுதான். ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்புப் பேரவை தலையிடவிடாமல், நயவஞ்சக நடவடிக்கையால் தடுப்பதும் இந்திய அரசுதான்.

இதோ, விடுதலைப்புலிகளைத் தடை செய்து உள்ள நாடுகளின் கூட்டு அமைப்பான ஐரோப்பிய ஒன்றியம், உடனடிப் போர்நிறுத்தத்துக்குக் குரல் கொடுத்துவிட்டது. புலிகளைத் தடை செய்து உள்ள, அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள், ‘இருதரப்பும் போரை நிறுத்துங்கள்’ என அறிவித்து விட்டன. தென்னாப்பிரிக்க அரசு, சிங்கள அரசின் இராணுவத் தாக்குதலை நிறுத்தச் சொல்லிவிட்டது. ஆனால், இன்றுவரை இந்திய அரசு, போரை நிறுத்தச் சொல்லவில்லை.ஏன்? ஏன்? ஏன்? என்று விÞவரூபம் எடுக்கும் கேள்விக்குக் கிடைக்கின்ற பதில் ஒன்றுதான். அதுதான், இந்திய அரசின் மன்னிக்க முடியாத துரோகம். எத்தனை மனத்துன்பம்? என் இருதயத்தைக் குத்திக் கிழிக்கும் முட்கள்தாம் எத்தனை? எத்தனை?

ஆனால், அனைத்தையும் தாங்கிடும் வலுவையும், உரத்தையும் தருவதெல்லாம் நீங்கள்தான். ‘ஈழத்தமிழரைக் காக்க’ கையெழுத்து இயக்கத்தை, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கிற்று. நீங்கள் அப்பணியில் ஈடுபட்டீர்கள். ஆனால், அதில் தீவிரம் தேவை. இன்னமும் முனைப்புத் தேவை. பதினோரு தமிழர்கள் தாயக பூமியில் தீக்குளித்து மடிந்தனர். நாம் எவ்வளவு பணி செய்தோம் என்று ஒருகணம் யோசியுங்கள், செயலாற்றுங்கள், செயலாற்றுங்கள் என உங்கள் கரங்களைப் பற்றி வேண்டுகிறேன்.
தோழர்களே!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நேர்ந்த பழைய நிகழ்வுகளை நினைக்கிறேன். 1993 ஆம் ஆண்டு, நான் உயிரினும் மேலாகப் போற்றி உழைத்திட்ட இயக்கத்தில் இருந்து, தன் சொந்தக் குடும்ப அதிகாரப் பிரவேசத்துக்காக, என் மீது கொடும்பழி சுமத்தி, கலைஞர் கருணாநிதி கட்சியில் இருந்து வெளியேற்றினார். அந்த அநீதியை எதிர்த்து, இயக்கத்தின் அடலேறுகள் ஐந்து பேர் தீக்குளித்து மடிந்தார்கள்.

இப்போது என் மீது பழி சுமத்தும் சகோதரர்களிடம் அன்று சொன்னேன்: ‘உங்கள் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்கிக் கொள்ள வேண்டாம். என்பொருட்டு, யாரும் இடர்ப்பட வேண்டாம். நான் பொதுவாழ்வில் இருந்து விலகுவேன். என்றும் அண்ணாவின் தம்பியாக இருப்பேன்’ என்றபோது, அந்தக் கருத்தை ஏற்க மறுத்தார்கள்.அடுத்துச் சொன்னேன்: ‘என்னோடு வந்தால் பட்டம், பதவிகள் கிடைக்காது; போராட்டங்களும், துயரமுமே பயணமாக இருக்கும்’ என்றேன்.

ஆனால், நாம் நடத்திய அரசியல் பயணத்தில், இயக்கத்துக்கு வந்த அதிகார வாய்ப்புகளை, பதவிகளை நான் விரும்பவும் இல்லை, ஏற்கவும் இல்லை. அந்த சகாக்களுக்குத் தந்து,பெருமிதமும், ஆனந்தமும் அடைந்தேன். அதிலும் குறிப்பாக, 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன், மத்திய அமைச்சர் பதவியை திரு மு.கண்ணப்பன் அவர்கள் விரும்புகிறார்கள் என்று அறிந்தவுடன், ஏற்கனவே ஒருவர் அதைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார், இப்பொழுது இவரும் கேட்கிறாரே என்று எண்ணி, பிரதமர் வாஜ்பாய் அவர்களிடமும், திரு அத்வானி அவர்களிடமும், ‘இருவருக்கும் அமைச்சர் பதவி தாருங்கள்’ என்று நான் வற்புறுத்தி, வலியுறுத்திக் கேட்டபோது, ‘உங்களுக்கு என்றால் கேபினட் அமைச்சர் தருகிறோம், இல்லையேல், ஒரு இணை அமைச்சர் பதவிதான்’ என்று கூறிவிட்டனர்.
அந்த முடிவை மாற்றுவதற்கு, நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எவ்வளவு என்பதை, சம்பந்தப்பட்டவர்கள் நன்கு அறிவர். வசதியாக ஒருவேளை இப்போது மறந்து இருக்கக்கூடும்.
திரு அத்வானி அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து, இருவருக்கும் அமைச்சர் பதவிகள் தர வாஜ்பாய் தீர்மானித்துவிட்டார் என்றபோது, நான் நெஞ்சம் நெகிழ்ந்து, அவர்கள் இருவருக்கும் நன்றி கூறியதும், அடுத்த அறையில் இருந்த திரு கண்ணப்பன் அவர்களிடம் ஓடிச்சென்று, கைகளைப் பற்றிக்கொண்டு மகிழ்ச்சியில் திளைத்ததையும் நான் மறக்கவில்லை.
குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில், பரந்த வெளியில், இருவரும் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் ஏற்றபோது, என் கண்கள் வடித்த ஆனந்தக் கண்ணீரை, அப்பொழுதே சங்கொலியில் கண்ணின்மணிகள் மடலாக ஆக்கினேன்.

எத்தனையோ நிகழ்வுகள்!

பொடா சட்டத்தில், காவல்துறை கைது நடவடிக்கைக்காக சென்னை விமான நிலையத்தில் காத்து இருந்தபோது, சிகாகோவில் இருந்து விண்ணில் பறந்து வந்து, மும்பை விமான நிலையத்தில் நான் இறங்கிய வுடன், அமைச்சர்கள் இருவரும் என்னைச் சந்தித்து என்னிடம் சொன்னதையும், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியையும், இன்றுவரை நான் வெளியிடவில்லையே?
19 மாத காலம், நானும் தோழர்களும், சிறைக்கொட்டடியில்! அந்த நாள்களில் ஏற்பட்ட அனுபவங்கள், அமைச்சர்கள் மேற்கொண்ட அயல்நாட்டுப் பயணங்கள் குறித்தும் நான் விசனப்பட்டது இல்லை.

2006 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், ‘அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும்’ என்று கடைசி நேரத்தில் ஓங்கி அடித்துச் சொன்னவர்கள், தலைமை நிர்வாகப் பொறுப்பில் இருந்த இந்த மூவரும்தான் என்பது, அனைத்து மாவட்டச்செயலாளர்கள், முன்னணியினருக்கும் ஐயத்துக்கு இடம் இன்றி நன்றாகத் தெரியும்.

நான் போட்டியிடவில்லை. ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதியின் குடும்ப ஏடுகளில், என்மீதுதான் எத்தனை இழிச்சொற்கள்? வசைமாரிகள்? அத்தனையும் தாங்கிக் கொண்டேன், கழகத்துக்காக! வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் வந்துகொண்டு இருந்தபோதே, கலைஞர் கருணாநிதி குடும்பத்தினர், ஏழு வாகனங்களில் வந்து, என் இல்லத்துக்கு முன் வந்து கூத்தடிக்கவும், கலவரம் செய்யவும் முனைந்தனர்.

முதல் அமைச்சர் குடும்பத்தினர் செய்த அக்கிரமத்தை, என் நெஞ்சை விட்டு நீங்காத சகோதரன் வீர.இளவரசன், சட்டமன்றத்தில் சாடினார். ஆனால், நம் சட்டமன்றக் கட்சித் தலைவராக இருந்தவர், அதுபற்றி வாய் திறக்கவில்லை.ஏன்? கொங்குச் சீமையின் உரிமையைக் காவு கொடுக்க, பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரயில் பாதை நிர்வாகத்தைக் கேரளத்தின் பாலக்காட்டுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததே முதல் அமைச்சர் கருணாநிதிதான் என்று, மத்திய அமைச்சர் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சொன்னதற்குப்பின்னரும்கூட, நாம் பல போராட்டங்களை நடத்தியும்கூட, நம் சட்டமன்றக் கட்சித்தலைவர், சட்டமன்றத்தில் கணை தொடுக்கும் கடமையைச் செய்யவில்லையே?உடன்பிறவாத அண்ணனாகத்தானே அவரிடம் நான் பாசம் காட்டினேன், மதித்தேன்? அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதெல்லாம், எப்படித் துடிதுடித்தேன் என்பது, என் மனம் அல்லவா அறியும்?
நமது தென்சென்னை மாவட்டச் செயலாளர், சகோதரர் வேளச்சேரி மணிமாறன் அவர்களை, ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசியதற்காக, முதல் அமைச்சரின் காவல்துறை சிறையில் பூட்டிய நேரம். தென்சென்னையில், ஈழத்தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டம். அன்றுதான், இருதய நோயால் பாதிக்கப்பட்ட திரு கண்ணப்பன் அவர்கள், அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த இரவுநெடுகிலும், தூங்காமல் விழித்து இருந்து, காலை ஏழு மணிக்குத்தான், நான் அப்பல்லோவில் இருந்து வீட்டுக்குச் சென்றேன் என்பதை யாரிடத்திலும் நான் சொன்னது இல்லையே?
அவரது மருமகன், நான் மிகவும் நேசித்த டாக்டர் கிருஷ்ணராஜ் அவர்கள், திடீரென மாரடைப்பால் மறைந்த செய்தி, இடியெனத் தாக்கி, நான் துன்பத்தில் துடித்ததை பழைய சங்கொலி கடிதத்தைப் புரட்டினால் தெரியும்.
இந்த இரண்டு சம்பவங்களையும், இப்போது நான் குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது.
பிப்ரவரி 22 ஆம் நாள் பிற்பகல் நான்கு மணி அளவில், திரு கண்ணப்பன் அவர்கள், கைத்தொலைபேசியில் என்னிடம் பேசினார்கள். எடுத்த எடுப்பில் நான் அவரிடம் சொன்னேன்: ‘நேற்றைய தினம் தி.மு.க. தோழர் சிவப்பிரகாசம் என்பவர், ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து இறந்து போனார். அவருக்கு மலர்வளையம் வைக்க ஆயத்தமாகிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது, தி.மு.க. வட்டாரத்தில் இருந்தே தெரிவிக்கப்பட்ட தகவல், ‘வைகோ வந்தால் அனுமதிக்காதீர்கள்; தகராறு செய்து விரட்டுங்கள்’ என்று, பெரிய இடத்தில் இருந்தே சொல்லப்பட்டு இருப்பதாகவும், எனவே, நான் வருவதைத் தவிர்க்குமாறும் கிடைத்த செய்தியை அவரிடம் சொன்னேன்.
‘அது நல்லதுதான்’ என்றவர், அடுத்துச் சொன்ன தகவல், என்னைத் தூக்கிவாரிப் போட்டது. ‘ நான் முதல் அமைச்சரைப் பார்த்துவிட்டு வந்தேன்’ என்றார். பலத்த அதிர்ச்சி அடைந்தேன். ‘என்ன சொல்கிறீர்கள்?’ என்றேன்.‘நான் முதல்வரைப் பார்த்தேன்’ என்றார். ‘ எதற்காக?’ எனக் கேட்டேன். ‘நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, மு.க.ஸ்டாலினும், வீராச்சாமியும் வந்து நலம் விசாரித்தார்கள். அதனால், எனக்கு மனதில் உறுத்தலாக இருந்தது. முதல் அமைச்சரைப் பார்த்தேன்’ என்றார்.
நான் அதற்கு மறுமொழியாக, ‘நீங்கள் பல நாள்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, உங்களை முதல் அமைச்சர் வந்து பார்க்கவில்லையே? உங்கள் குடும்பத்திலேயே மிகப்பெரிய துக்கமாக, உங்கள் மருமகன் டாக்டர் கிருஷ்ணராஜ் இறந்தபின்னர், பொள்ளாச்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், உங்கள் வீட்டுக்கு வந்து துக்கம் கேட்கவில்லையே? ஏன், முதல் அமைச்சர் உங்களிடம் தொலைபேசியில்கூடத் துக்கம் கேட்கவில்லையே? சரி; அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தபின்பு என்னிடம் கூறுகிறீர்கள். எனக்கு உடன்பாடு இல்லை. இதற்குமேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்றேன்.
நான் வேறு எந்த வார்த்தையும் பேசவில்லை. கோபிக்கவும் இல்லை. நான் கோபித்ததாகக் கூறுவது அப்பட்டமான பொய். அதன்பிறகு, 28 ஆம் தேதி அன்று, தூத்துக்குடியில் பிரணாப் முகர்ஜிக்குக் கருப்புக்கொடி காட்ட முனைந்து, நான் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது, நண்பர் குட்டி அவர்கள் சிறை நேர்காணலில், திரு கண்ணப்பன் அவர்கள், அவரிடம் பேசியதாக என்னிடம் கூறினார்.
22 ஆம் தேதி முதல், நான் தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளானேன். ஏனெனில், திரு கண்ணப்பன் அவர்கள், முதல் அமைச்சரைச் சந்திப்பதற்கு முதல்நாள்தான், பிப்ரவரி 21 ஆம் தேதி, கலைஞர் கருணாநிதி அவர்கள் என்னைக் கடுமையாக விமர்சித்து விடுத்த அறிக்கை, அமைச்சர் பொன்முடி பெயரில் வெளியாயிற்று. அதில், ‘கள்ளத்தோணியில் சென்று, மாபெரும் கிரிமினல் குற்றத்தைச் செய்தவன் என்றும், எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
ஈழத்தமிழ் இனத்தின் ஈடில்லாத் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க, மரண பயங்கரத்தினூடே உயிரைத் துச்சமாக மதித்து நான் கடல் வழியே சென்றதும், இந்திய இராணுவத் தாக்குதலில் நான் மயிர் இழையில் உயிர் பிழைத்துத் திரும்பியதும், என்னைக் காப்பாற்ற, விடுதலைப்புலி சரத் என்ற பீட்டர் கென்னடி தன் உயிரைத் தந்ததும், கலைஞர் கருணாநிதியின் அகராதியில் கள்ளத்தோணி ஆகிவிட்டது.
எனக்குக் கருணாநிதியா உயிர்ப்பிச்சை கொடுத்தார்? நான் சாகாமல் உயிரோடு வந்துவிட்டேனே என்று அவர் எவ்வளவு கவலைப்பட்டார் என்பது, அவரது அரக்க மனதுக்கு மட்டும்தான் தெரியும். என் உயிரைக் காப்பாற்றியவர்கள் விடுதலைப்புலிகள்.
கலைஞர் கருணாநிதியை மருத்துவமனையில் போய் நான் சந்தித்து நலம் விசாரிக்கவில்லையாம்; நான் பண்பு அற்றவனாம். இவரது மருத்துவமனை பிரவேசம் எதற்காக என்பதைப் பற்றி, வீரத்தியாகி முத்துக்குமார் தனது மரண வாக்குமூலத்தில், உலகத்துக்கே பறைசாற்றி விட்டாரே?
அரசியல் நாகரிகத்தைப் பற்றியும், மனிதநேயத்தைப் பற்றியும் கூறுவதற்கு, கலைஞர் கருணாநிதிக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் மகன் டாக்டர் பரிமளம் அவர்கள், அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்புக்காகச் சிகிச்சை பெற்றாரே, அவரைப் போய் கருணாநிதி பார்த்தாரா? அந்த மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றது ஒருவேளை தனக்குத் தெரியாது என்று கூறுவாரானால், முதல் அமைச்சர் பதவிக்கே அவர் லாயக்கற்றவர் என்று அர்த்தம். டாக்டர் பரிமளம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதைத் தெரிந்துகொண்டதற்குப் பிறகுதான், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆளுநர் பர்னாலாவை, கலைஞர் கருணாநிதி போய்ப் பார்த்தார்.
டாக்டர் பரிமளத்தின் உயிர் அற்ற உடல், நுங்கம்பாக்கம் வீட்டில் இருந்து, சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, அந்த இறுதி ஊர்வலத்துக்குத் தான் வராவிட்டாலும், யாராவது ஒரு அமைச்சரையாவது அனுப்பி வைத்தாரா?இல்லையே? நாராச நடையில், பொன்முடி பெயரில், என் மீது கலைஞர் கருணாநிதி புழுதிவாரித் துhற்றியதற்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டிய கட்சியின் அவைத்தலைவர், அதற்குப்பதிலாக, முதல்வரைச் சந்தித்து குசலம் விசாரித்து, பழைய உறவு கொண்டாடுவது என்பதை, இயக்கத்தின் எந்தத் தொண்டன் ஏற்றுக்கொள்வான்?
சரி, அதுதான் போகட்டும். மறுமலர்ச்சி தி.மு.க.வின் அவைத்தலைவர் பொறுப்பில் இருந்த ஒருவர், தன்னை வந்து நேரில் பார்த்து நலம் விசாரித்ததைப் பெரிதாகப் பாராட்டுகிற கலைஞர் கருணாநிதி, அதனை உண்மையிலேயே மதித்தாரா? பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று, பிரணாப் முகர்ஜிக்குக் கருப்புக்கொடி காட்டியதற்காக, என்னை ஆலகால விடத்தை விடக் கொடிய வார்த்தைகளால் வசைபாடித் தீர்த்தாரே?
அந்தக் கருப்புக்கொடிப் போராட்டத்தில், உணர்ச்சிவயப்பட்ட இளைஞர்கள் சிலர், பிரணாப் முகர்ஜியின் படத்துக்குத் தீயிட்டனர். அந்த ஆத்திர உணர்ச்சி நியாயமானது. ஏனெனில், பிப்ரவரி 18 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில், கொடியவன் ராஜபக்சேயின் மறுபதிப்பாக பிரணாப் முகர்ஜி அறிக்கை தந்தார். அந்த அறிக்கை, தமிழ்நாட்டு வீதிகள்தோறும் தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டிய அறிக்கை.
அது மட்டும் அல்ல; தூத்துக்குடியில் பிரணாப் முகர்ஜி இலங்கையில் போர்நிறுத்தம் வர வேண்டும் என்று பேசியது, கடைந்தெடுத்த பித்தலாட்டம். ஜெகஜ்ஜாலப் புரட்டு. ஏனெனில், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக, பிரணாப் முகர்ஜி, தூத்துக்குடியில் அப்படிச் சொன்னார். ஆனால், இலங்கை அரசுக்கு, போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று, இந்திய அரசு எந்தக் கோரிக்கையும் அந்த 28 ஆம் தேதியோ, அதற்குப் பின்போ, ஏன், இன்றுவரையிலும் செய்யவில்லை.
தூத்துக்குடியில் பிரணாப் முகர்ஜி பேசியதைக் குறிப்பிட்டு, மறுநாள் கொழும்பு நகரில், செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் பலிதகோகனா கூறுகையில், இந்திய அரசிடம் இருந்தோ, இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் இருந்தோ, போர்நிறுத்தம் செய்யுமாறு எந்த வேண்டுகோளும் வரவில்லை’ என்று சொன்னார்.
உண்மை இவ்வாறு இருக்க, பிரணாப் முகர்ஜியின் பேச்சால், தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டதாகக் கொட்டி முழக்கி உள்ள அதே முரசொலி கடிதத்தில், என் பெயரைக் குறிப்பிடாமலேயே, என் மீது, நான் என்றுமே மன்னிக்கமுடியாத இழிச்சொல்லையும், அபவாதத்தையும், பழியையும் சுமத்தி எழுதி உள்ளார்.
‘ஆனால், இந்த நேரத்தில்தான், இலங்கைத் தமிழர் பிரச்சினையை மாசாக்கி-மண்ணாக்கி-காசாக்கி-அரசியலில் நாணயத்தைத் தூசாக்கி, சில வக்கிர மூளையினர்; தாங்கள் வகித்த பொறுப்புகளுக்குத் தகுதி அற்றோர் என்று காட்டிக்கொள்ள, பிரணாப் வருகையை எதிர்த்து மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, நாகரிகக் கேடாக நடந்துகொண்டு, நமது வெளியுறவு அமைச்சர் பிரணாப்பின் படங்களுக்கும் தீயிட்டுப் பார்த்துத் திருப்தி அடைந்து இருக்கின்றனர்’.
என்று எழுதி உள்ளார்.
93 இல் என் மீது சுமத்திய பழியைவிட, இந்தப் பழிச்சொல் மிகக் கொடூரமானது.
ஈழ விடுதலைக்கு உயிர்களைக் கொடையாகத் தருகின்ற விடுதலைப்புலிகளிடம் பணம் பெறுவது என்பது, உடல் வாணிகத்தை விட மிகமிக இழிவானது. மனச்சாட்சியே இல்லாத கலைஞர் கருணாநிதிக்குத்தான், இப்படிப் பழிசுமத்தும் துணிச்சல் வரும்.
இத்தனைக்குப் பின்னரும், மார்ச் 7 ஆம் தேதியன்று கூட்டப்பட்ட மறுமலர்ச்சி தி.மு.க.வின் உயர்நிலைக் குழுக் கூட்டத்துக்கான அழைப்பு, முறையாக, வழக்கமாக அனுப்புகின்ற முறையில் அனுப்பப்பட்டது. இதற்கு முன்னர் உயர்நிலைக் குழுக்கூட்டம் கூட்டப்படுகிறபோது, என்னவிதத்தில் சங்கொலியில் அறிவிப்புகள் வெளியானதோ, அதே வடிவத்தில்தான் இந்த முறையும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், என்னுடைய ஒப்புதலோடுதான் திரு கண்ணப்பன் அவர்கள் முதல்வரைச் சந்தித்ததாக, உண்மைக்கு முற்றிலும் புறம்பான செய்திகள் வந்தன. இதை நான் பிரச்சினையாக ஆக்கவில்லை. விளக்கம் கேட்கவில்லை. ஆனால், திரு கண்ணப்பன் அவர்கள், தன்னுடைய இல்லத்துக்கு, ஒன்றிய, நகரச் செயலாளர்கள், மாவட்டப் பிரதிநிதிகளை வரவழைத்து, ‘பொதுச்செயலாளர் என்னைப் புறக்கணிக்கிறார்’ என்ற குற்றச்சாட்டைத் தொடுக்கத் தொடங்கினார்.
இந்தநிலையில், அருமைச் சகோதரர்கள் திருப்பூர் துரைசாமி, கணேசமூர்த்தி, ஆர்.டி.மாரியப்பன், ஆர்.ஆர். மோகன்குமார், டி.என். குருசாமி, அட்டாரி நஞ்சன் ஆகியோர் என்னைச் சந்தித்தனர். நடந்தவற்றை நான் விளக்கினேன். என் மீது எந்தத் தவறும் இல்லை என்றே அவர்கள் எண்ணினர். அப்பொழுதுதான் ஒரு உண்மையை நான் அறிந்தேன். திரு மு.க. ஸ்டாலினும், திரு ஆர்க்காடு வீராச்சாமியும், ‘தலைவர் உங்களைப் பார்க்க விரும்புகிறார் என்று திரும்பத்திரும்பச் சொன்னபின்னர்தான் தாம் போய்ப் பார்த்ததாக’ அவர்களிடம் திரு கண்ணப்பன் அவர்கள் கூறி உள்ளார்.
இந்த நயவஞ்சக நரி வேலையெல்லாம் யாருக்குக் கைவந்த கலை என்பதை, நீங்களும், நானும் நன்றாக அறிவோம்.நம் அருமைச் சகோதரர்கள், திரு கண்ணப்பன் அவர்களைத் திரும்பப் போய்ச் சந்தித்தபோதுதான், அவர் ஏற்கனவே ஒரு முடிவை மேற்கொண்டு, அதைச் செயல்படுத்த ஆதரவு திரட்டுகிறார் என்பதை உணர்ந்தார்கள்.
மார்ச் 8 ஆம் நாள் காலையில், உடுமலைப் பேட்டையில் கழகத்தோழர் சின்னச்சாமி அவர்களுடைய புதல்வியின் திருமண விழா, திரு மு. கண்ணப்பன் அவர்கள் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. முதல் நாள் மாலை வரவேற்பில் கலந்து கொள்வதாக இருந்த நான், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ஆருயிர்ச்சகோதரர் ஆரணி இராஜா அவர்களின் புதல்வியின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு விட்டு, அங்கிருந்து ரயிலில் பயணித்து, 8 ஆம் தேதி காலை, திருப்பூரில் இறங்கி, உடுமலைப்பேட்டைத் திருமணத்தில் கலந்துகொள்ள இருப்பதை, கோவை மாவட்டச் செயலாளர் சகோதரர் ஆர்.டி.மாரியப்பன் அவர்கள், திரு கண்ணப்பன் அவர்களிடம் தெரிவித்து, ‘உங்கள் தலைமையில்தான் திருமணம் நடக்கிறது, பொதுச்செயலாளரும் வருகிறார், நீங்கள் அங்கே வரும்போது, ஒரே மேடையில் இருவரும் பங்கு ஏற்பீர்கள், பிரச்சினை தீர்ந்துவிடும்’ என்றதற்கு, அவர் மறுத்துவிட்டார்.
அதன்பிறகு, 72 மணி நேரத்துக்கு உள்ளாக, திரு மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் புடைசூழ திரு கண்ணப்பன் வீட்டுக்கு விஜயம். தி.மு.க.வில் சேரப்போவதாக அறிவிப்பு. அனைத்தும் எவ்வளவு வேகத்தில் நடந்துவிட்டது.நம்மோடு பயணம் செய்தவர்களில், தொடர முடியாமல் நின்றவர்களையோ, விலகிச் சென்றவர்களையோ குறித்து நான் மனதுக்குள் வருந்தினேனேதவிர, அவர்களைப் பழித்தது இல்லை. இவ்வளவு காலம் நம்மோடு கைகோர்த்து வந்ததற்கு நன்றி. எங்கிருந்தாலும் அவர்கள் நன்றாக இருக்கட்டும்!
இந்த வேதனைகளை உள்ளம் சுமந்துகொண்டுஇருந்த நேரத்தில்தான், ஏழாம் தேதி அன்று காலையில்,நமது மறுமலர்ச்சி ஏவுகணை நாஞ்சில் சம்பத் அவர்களை, கைது செய்ய திருப்பூர் காவல்துறை புறப்பட்டு வருகிறது என்று அறிந்து,உடனடியாக சம்பத்தோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு, தாயகத்துக்கு வரச் சொன்னேன்.தாய்ப்பறவை குஞ்சுகளைச் சிறகால் மூடிப் பாதுகாக்கும் உணர்வுதான் என்னுடைய இயல்பு என்பதைநீங்கள் நன்றாக அறிவீர்கள். அடக்குமுறையை ஏவுகிறார் கருணாநிதி என்பதை,சில நாள்களுக்கு முன்பு, கருணாநிதியின் குடும்ப நாளேட்டில், ஊசியின் குடைச்சலிலேயே அறிந்தேன்.
நாடாளுமன்றத் தேர்தலில், நமது பிரச்சாரத்தை முடக்கத் திட்டமிடுகிறார் முதல் அமைச்சர். அதனால்தான், கொள்கை முழங்கும் நமது புலிப்போத்தை, காராக்கிருகத்தில் அடைக்கிறார். காவல்துறையின் தலைமை அதிகாரி ஒருவர், இந்த ஒரு வாரத்துக்குள் நான்கு முறை, பாதுகாப்புச் சட்டம் பாயும் என மிரட்டல் அறிக்கை விடுத்து உள்ளார். தூத்துக்குடியில் நான் கைது செய்யப்பட்டபோதே, முதல் அமைச்சர் தன்னுடைய அறிக்கையில், தேசப் பாதுகாப்புக்கான சட்ட நடவடிக்கை என்று மிரட்டலும் விடுத்தார்.
இவற்றுக்கெல்லாம் ஒரு உள்நோக்கம் இருக்கிறது என்பதை ஊகிக்கிறேன். அடக்குமுறைக்கும், ஆபத்துகளுக்கும் நாம் அஞ்சிடப் போவது இல்லை. ஆனால், நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு, அறம் சரியான தண்டனையைத் தந்தே தீரும்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, வேலூர், சேலம், புதுச்சேரி ஆகிய இடங்களில், அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் பிரமாண்டமான பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அனைத்திலும் நான் பங்கு ஏற்றேன்.
மார்ச் 15 ஆம் தேதி, மராட்டிய மாநிலத்தின் தலைநகராம் மும்பையில், இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் குழுவினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில், சிறப்புப் பேச்சாளராக நான் கலந்து கொண்டேன். 21 ஆண்டுகளுக்குப் பின்னர், மும்பையில் பேசினேன். மும்பைத் தமிழர்கள், பல்லாயிரக்கணக்கில் திரண்டு இருந்தனர். இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியவர், தஞ்சை மாவட்டத்தில் இருந்து மும்பைக்குச் சென்று, பல ஆண்டுகளாக அங்கே வசித்துவரும் தமிழ்ச்செல்வன் எனும் ஒரு வீர வேங்கை.
கடந்த நவம்பர் 26 ஆம் நாள் அன்று, மும்பை நகரில், பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள், படுகொலைகளை நடத்தியபோது, விக்டோரியா ரயில் நிலையத்தில், நூற்றுக்கணக்கில் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது,இயந்திரத் துப்பாக்கிகளின் குண்டு மழைக்கு இடையே, மரணத்துக்கு அஞ்சாது பாய்ந்து சென்று, 35 உயிர்களைக் காப்பாற்றிய தீரர்தான், இந்தத் தமிழ்ச்செல்வன் ஆவார். அவரது வீரதீரச் செயலை மும்பை நகரமே பாராட்டுகிறது. மராட்டிய மாநில ஆளுநர் ஜமீர் அவர்கள், தமிழ்ச்செல்வனைப் பாராட்டி விருதும் வழங்கி உள்ளார். மும்பை பொதுக்கூட்டத்தில் பங்கு ஏற்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்களில், 90 விழுக்காடு இளைஞர்கள் என்பது, இதயத்துக்கு இன்பத் தேன் பாயும் செய்தி ஆகும். இரண்டு மணி நேரம் நான் உரை ஆற்றினேன்.
தோழர்களே, தாய்த் தமிழகத்தில் தமிழ் மக்களின் உள்ளம், ஈழத்தமிழர் பிரச்சினையால் எரிமலையாகிக் கொண்டு இருக்கிறது என்பதன் அடையாளம்தான், பதினோரு பேர் தீக்குளித்து மடிந்து உள்ள நிகழ்வுகள் ஆகும். ஒவ்வொரு சகோதரன் தீக்குளித்த செய்தி கிடைத்தவுடன், அந்தத் தியாகத் திருவிளக்குகளின் திருமுகங்களைக் காண, ஓடோடிச் சென்றேன். சென்னையில் தி.மு.க. தோழர் சிவப்பிரகாசத்துக்கு நேரில் மலர் அஞ்சலி செலுத்த இயலாமல் போனதை ஏற்கனவே சொன்னேன்.
உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களை உலுக்கிய வீரத்தமிழன் முத்துக்குமார் மறைந்த மறுநாள், அந்த வேங்கை வசித்த அவரது தங்கையின் எளிய வீட்டுக்குச் சென்றேன். நான் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்தவுடன், அத்தங்கையின் கணவரும், முத்துக்குமாரின் தந்தையும் என்னைச் சிறையில் காண, பயணத்துக்குத் தயாரானார்கள் என்பதையும் அறிந்தேன். முத்துக் குமாரின் தங்கை, ஒரு பெண் மகவுக்குத் தாயானாள் என்பதை அறிந்து, அந்த வீட்டுக்குச் சென்று, வாழ்த்துச் சொல்லி, அவர்கள் பெயர் சூட்டச் சொன்னதால், அக்குழந்தைக்கு
‘முத்தெழில்’ எனப் பெயரும் சூட்டினேன்.
பள்ளபட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை எழில் வேந்தன் ஆகியோரின் இறுதி ஊர்வலங்களிலும் நான் கலந்து கொண்டேன். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வள்ளிப்பட்டு சீனிவாசனை, நெருப்பில் கருகி மருத்துவமனையில் துடித்துக்கொண்டு இருந்தபோது, அந்த நள்ளிரவில் போய்ப் பார்த்தேன்.
விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க. தோழர் கோகுல ரத்தினம், தீக்குளித்து இறந்ததை அறிந்து, அங்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினேன். கடலூர் மாவட்டத்தில் ஆனந்த் எனும் 22 வயது இளைஞர் தீக்குளித்தார் என்ற செய்தி, மும்பையில் இருந்த எனக்குக் கிடைத்தது. 16 ஆம் தேதி காலை விமானத்தில் மும்பையில் இருந்து சென்னை வந்த நான், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக புதுச்சேரிக்குச் சென்று, அரசு மருத்துவமனையில் மரணப் படுக்கையில் இருந்த அந்தத் தியாகத் தம்பியைப் பார்த்தவுடன், இருகரம் கூப்பி வணங்கினேன். அத்தம்பி, எழுவதற்கு முயற்சித்தார். நான் தடுத்தேன். கரம்கூப்பி வணங்கினார்.
‘என்ன தம்பி, இப்படிச் செய்துவிட்டீர்களே? உயிரோடு வாழ்ந்து போராட வேண்டிய நீங்கள், இப்படித் தீக்குளிக்கலாமா?’ என்று கேட்டேன்.
தீர்க்கமான குரலில், மிகத் தெளிவாக உடனே பதில் சொன்னார்: ‘உழைத்தால்தான் எனக்குக் கஞ்சி. வேலை செய்தால்தான் ஒருவேளைச் சோறு. நான் உயிரோடு இருந்து எதைச் சாதிக்கப் போகிறேன்? ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற ஏதாவது ஒரு விதத்தில் என்னுடைய சாவு உதவட்டுமே என்றுதான் தீக்குளித்தேன்.’ என்றார்.
உடலெல்லாம் கருகி இருந்த அந்தத் தம்பி, நெருப்பு அரித்த தன் உடலின் வேதனைக்கு முனகாமல், இப்படி ஆணித்தரமாகச் சொன்னதைக் கேட்டு, என் விழிகள் அந்தத் தம்பியின்மீது, கண்ணீரைப் பொழிந்தன. இந்த வீரமகனுக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை. திருமணமும் ஆகவில்லை. ஒரேயொரு தங்கை. அழுகையே வாழ்வாகிவிட்ட அத்தங்கைக்கு ஆனந்தி என்று பெயர். அருகில் அவளை அழைத்து, அத்தங்கையைச் சுட்டிக்காட்டினேன். ‘தங்கை’ என்று அந்த வீரனின் உதடுகள் முணுமுணுத்தன. சோகம் நிறைந்த பார்வையைச் செலுத்தினான் தங்கை மீது. கொஞ்சங்கொஞ்சமாக விழிகள் மூடிக்கொண்டன. பேச்சு நின்றுவிட்டது. உங்களிடம் பேசியதுதான், ஆனந்தனின் கடைசிப் பேச்சு’ என்று பின்னர் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர், தலைவர்கள் சந்திக்கச் சென்றபோது, பேச்சு நின்றுவிட்டு இருந்தது.
இதற்கு இடையில், இன்னொரு சோகச்செய்தி தாக்கியது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இராஜசேகர் என்ற இளைஞன், ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து, தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்ற செய்திதான் அது.
நான் பாண்டிச்சேரியில் பொதுக்கூட்டம் பேசி முடித்துவிட்டு, நள்ளிரவு 12 மணிக்குப் புறப்பட்டு, காரில் தஞ்சைக்குப் பயணமானேன். அதிகாலை நான்கு மணி அளவில் தஞ்சை மருத்துவமனைக்குச் சென்றேன். இராஜசேகரன் அனுமதிக்கப்பட்டு இருந்த அந்த வார்டின் வாயிலில் கதறி அழுதவாறு ஏழ்மைக்கோலத்தில் இருந்த ஒரு மூதாட்டியும் ஒரு தங்கையும், தரையில் துடித்துப் புரண்டனர்.
இறுதி மூச்சு ஊசலாடிக் கொண்டு இருந்த ராஜசேகரின் அருகில் போய்ப் பார்த்தேன். உடலெல்லாம் கருகி, முகமும் சிதைந்துபோய் இருந்தது. ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டு இருந்தார். நெஞ்சைப் பிளந்தது அந்தக் காட்சி. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அழுதுபுரண்டு அரற்றும் இராஜசேகரின் தாரத்துக்கும், தாய்க்கும் என்ன ஆறுதலை நான் சொல்ல முடியும்?
தாங்க இயலாத மனவேதனையோடு, அங்கே இருந்த செய்தியாளர்களிடம் சொன்னேன்: இலங்கைத் தமிழர்களுக்காக இராஜசேகர் தீக்குளித்து உள்ளார். இன்னும் சில மணி நேரத்துக்குள் அந்த உயிர் அடங்கிவிடும். ஆனால், அவர் மனைவியோடு சண்டை போட்டதாகவும், அதனால் தீக்குளித்ததாக ஒரு கருத்தையும், வயிற்றுவலியால் தீக்குளித்ததாக ஒரு கருத்தையும் காவல்துறை சொல்லி உள்ளது. இது கொடுமையிலும் கொடுமை. அயோக்கியத்தனமான, ஈனத்தனமான வேலை. இப்படிக் காவல்துறையைக் கூறவைத்தது யார்? முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி என்று குற்றம் சாட்டுகிறேன்.
பள்ளபட்டி ரவி தீக்குளித்தபோது, அமரேசன் தீக்குளித்தபோது, சீனிவாசன் தீக்குளித்தபோது, இப்படிக் காவல்துறையின் மூலம் உண்மையை மறைத்து, இந்தத் தீக்குளிப்புத் தியாகங்களைக் கொச்சைப்படுத்த காவல்துறை முற்பட்டதற்கு, முதல் அமைச்சர்தான் முழுக்க முழுக்கக் காரணம் ஆவார்.
தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து மடிகிறார்கள் என்ற செய்தி பரவக்கூடாது; தமிழர் மனம் எரிமலையாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான், முதல் அமைச்சர் இந்த அக்கிரமத்தைச் செய்கிறார். அதனால்தான், தீக்குளித்தவர்களுக்கு அவர் இரங்கல்கூடத் தெரிவிக்கவில்லை. முத்துக்குமார் இறந்தபின்பு, ஆறு நாள்கள் கழித்து, வேறு வழி இல்லாமல் கட்சி செயற்குழுவில் ஒப்புக்கு ஒரு தீர்மானத்தைப் போட்டார். அதன்பிறகு, இத்தனை பேர் தீக்குளித்து மடிந்தனர். இதுவரையிலும், எந்த இரங்கலும் அவர் தெரிவிக்கவில்லை. ஏன்? தி.மு.க.வைச் சேர்ந்த இருவர் தீக்குளித்து இறந்தபோதும், அவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கவில்லை. இந்த மகானுபாவர்தான், மனிதநேயத்தைப் பற்றி எனக்குப் போதிக்கிறார்’ என்றேன்.
கழகக் கண்மணிகளை நான் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நாடாளுமன்றத் தேர்தல் களப்பணி நம்மை அறைகூவி அழைக்கும் இந்தநேரத்தில், ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற, ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவை நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும். கிழக்குத் தைமூரில், அந்தப் பாதுகாப்புப் பேரவைதான், தலையிட்டுத் தீர்வு கண்டது. அதனால்தான், ஐ.நா.வின் பொதுச்செயலாளருக்கும், அமெரிக்க, ரஷ்ய அதிபர்களுக்கும் கோடிக்கணக்கில் கையெழுத்துகளை அனுப்பிவைக்கத் தீர்மானித்து வேலையைத் தொடங்கினோம்.
நம் சொந்தச் சகோதர, சகோதரிகள், கொலையுண்டு மடிகின்றனர் அங்கே. அதனைத் தடுக்கத் துடிக்கும் தமிழர்கள் தீக்குளித்து மடிகின்றனர். நீங்கள், சிரமங்களைப் பாராது, கையெழுத்துகள் வாங்கும் பணியைத் தீவிரப்படுத்துங்கள். தாமதம் செய்யாதீர்கள், தள்ளிப் போடாதீர்கள். உற்றுழி உதவ முன்வாருங்கள்!


நம்மை அழிப்பதற்குத் திருக்குவளையார் போட்ட திட்டம் அனைத்தும் மண்ணாகி விட்டது. விடம் தோய்ந்த அம்புகளை இப்போது வீசுகிறார்.
அடிபட்ட புலியாக, வீறுகொண்ட வேங்கையாக எழுவோம்!

No comments:

Post a Comment